
தம்மால் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ததேகூகாரர்கள் தமது அரசியல் சமூகத் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்வுகள் தொடர்பாக அரசுடன் நடத்தும் சந்திப்புகள் பேச்சுவார்த்தைகளின் போது உள்ளத் தூய்மையோடும் உண்மையான பக்தியோடும் ஒரு பேச்சுவார்த்தை அரங்கை காரிய சித்தி தரும் வகையாக ஆக்கும் திருமுறைகளைக் கடைப்பிடித்து சரியாகப் பண்ணிசைக்கிறார்களா!
சாதாரண தமிழ் மக்களிற் பெரும்பாலோர் அவர்களின் இன்றைய பரிதாப வாழ்வு நிலையிலிருந்து மீள் எழுவதற்கே சக்தி போதாமல் இருக்கையில் அவர்கள் நாட்டு அரசியல் நடப்புகள் மீது அக்கறையற்றவர்களாக இருப்பது இயல்பான ஒன்றே!
அதேவேளை, தமிழ் அரசியல் சமூக புத்திஜீவிப் பிரமுகர்களிற் பெரும்பாலோர் தமது அன்றாட வாழும் பிழைப்பு நிலைகளுக்கும் தமது சமூக முக்கியத்துவர் எனும் பிரபலத்தைத் தக்க வைப்பதற்கும் உரிய விதமாக பாட்டெழுதி எந்த வகையான இசையைப் போட்டால் ஏற்புடையதாக பகிரங்கத்தில் கைதட்டல்கள் கிடைக்குமோ அந்த வகையான இசைப்புகளிலேயே ஈடுபாடாக உள்ளனர்.
அவர்கள் ஆமிக் கொமாண்டர்களைச் சந்திக்கையில் அவர்களைச் சாந்தப்படுத்த திருவாசகங்கள் பாடுகிறார்கள்,அரசாங்க சார்பு அரசியல்காரர்களோடு கலந்து கொள்ளும் பொதுவிழாக்களின் மேடைகளில் அவர்களுக்கு சாமரம் வீச என திருப்புகழ் இசைக்கிறார்கள், அத்துடன் தமது தமிழ் உறுதியை நிலைநாட்டுவதற்காக் ததேகூக்காரர்களை தலைமைப்பதவிகளில் தூக்கிவிடவென அவ்வப்போது தேர்தல்களின் போதும் வேறு தளங்களிலான தமது உரைகளின் போதும் ஓங்கார ரீங்காரங்கள்;, சங்கார சங்கொலிகள், எக்காள முரசறைகள், அவலம் பாடும் முகாரி, தேசிய உணர்ச்சிகளைக் கிளப்ப தேஷ்ராகம் என பல்லிசைகளில் தமது அரசியற் கருத்துப் பாடல்களை இயற்றி அந்தந்த இடத்துக்கேற்ற வகையாக கச்சேரி பண்ணுகிறார்கள்.
ஏன் அப்படி நீங்கள் என்று அது பற்றிக் கேட்டால், தாங்கள் என்ன செய்வது புலிகளுடன் வாழ்ந்து பழக்கப்பட்ட தமது கடந்த கால அனுபவங்கள் அத்துடன் இன்று தாம் வாழும் புறச்சூழல்கள் அப்படியாக உள்ளன என்கிறார்கள்.
இதனால் உண்மைகளைக் கண்டறிவதற்கான விவாதத்தில்,உண்மைகளை சமூகம் அறியும் வகையாகத் தெரிவிப்பதில்,சரிகளை நோக்கி மாணவர்களையும் இளைஞர்களையும் மற்றும் சமூக அக்கறை கொண்டோரையும் வழிப்படுத்துவதில் -நெறிப்படுத்துவதில் ஈடுபாடு கொண்ட அறிவார்ந்த பகுத்தறிவாளர்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் வெளிநாடுகளிலும் சரி உள்நாட்டிலும் சரி கருகிப் போய்க் கிடக்கும் எமது சமூகத்தில் பகிரங்கத்தில் காண்பதென்பது வானத்தில் முதலாம், இரண்டாம் பிறைகளைக்; காண முடியாதது போல அருகிப் போய் இருக்கின்றது.
சிங்களம், சிங்கள இனம், சிங்கள அரசு, சிங்கள இராணுவம் என்பவற்றுக்கு எதிரான அரசியலே தமிழர்கள் மத்தியில் பிரதானமானதாக இருக்கும் வரை இங்கு பகுத்தறிவு பூர்வமான முற்போக்கு அரசியல் தலையெடுப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றே.
தம் கண் முன்னால் நடக்கும் போலி அரசியல்கள் தொடர்பாகவும், மக்கள்-விரோத பகற்கொள்ளைகள் தொடர்பாகவும்,தாம் காதால் கேட்கும் மற்றும் பத்திரிகைகளிற் படித்தறியும் ஏமாற்று அரசியற் கருத்துக்கள் தொடர்பாகவும் ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி சரியான விடைகளைக் கண்டறிந்து தெளிவுபெற முற்படுவோரின் எண்ணிக்கை நூற்றில் ஒன்று அல்லது இரண்டு என்னும் நிகழ்தகவாகவே உள்ளது. .
அவ்வாறான கேள்விகளுக்கு தெளிவான விடைகள் தெரிந்தோரும் கூட அவர்கள் மற்றவர்களுக்கு தெளிவான புரிதல்களை ஏற்படுத்துவதென்பது கையுளி கொண்டு கல்;மலையை உடைக்கும் காரியமாகவே இங்கு உள்ளது.
இலங்கைத் தமிழர்களிற் பெரும்பான்மையினர் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு இன உணர்ச்சி அரசியலிலேயே மூழ்கிப் போனார்கள். சுதந்திர இலங்கையில் அரசியல் அதிகாரமானது தமிழர்களைப் பங்காளர்களாக ஆக்காது சிங்கள அதிகாரமாகவே ஆகிப் போனதாலும்,தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களின் நிலங்களிலும், இலங்கையின் அரச நிர்வாகத்திலும், அரச படைகளிலும்;, பொலிசிலும், பொருளாதாரத்திலும், உயர்கல்வியிலும் என சிங்களமயமாக்கமானது இலங்கையின் அனைத்து அரசியற் பொருளாதாரத் தளங்களிலும் ஆழ விரிந்து பரந்ததாலுமே தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழி உணர்வு, தமிழின அக்கறை, தமிழ்த் தேசிய அடையாளம், தமிழர் வரலாற்றின்; பெருமிதம் என்பன தலைதூக்கி வளர்ந்துள்ளன.
அவற்றை வளர்த்துவிடுவது தமது இனத்துக்கான பொதுச்சேவை என சுயதிருப்தி கொள்பவர்களை இலங்கையின் அரசியல் நிலைமை பெருக்கி விட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதனிலும் மேலாக, குளம்பிய அரசியல்-சமூகக் குட்டையில் தூண்டில் போட்டு தமது இரைப்பைகளையும் திறைப்பைகளையும் நிரப்பிக் கொள்ளும் சுயலாப அரசியல் வியாபாரிகளையும் இந்த நிலைமை இங்கு மிகவும் அதிகரித்து மொய்க்க விட்டுள்ளது. .
இந்த தமிழ், தமிழ் இனம், தமிழர் பெருமை, தமிழ்த் தேசியம், தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமை என்பதெல்லாம் இங்கு அரசியல் வெறியைத் தலையில் ஏற்றி தக்க வைக்கும் சுலோகப் பானங்களாக உள்ளன. நிர்வாண உலகத்தில் ஆடை அணிபவர்கள் பைத்தியக்காரர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பது போல இந்த அரசியல் வெறிப்பானங்களை விழுங்கி தலை சுற்றி நிற்கும் தமிழர்கள் மத்தியில் உணர்ச்சி வசப்படாமல் உண்மைகளைக் கண்டறிவதற்கான கேள்விகளை எழுப்புபவர்களும், பகுத்தறிவு மிக்க கருத்துக்களை முன்னெடுப்பவர்களும், புரட்சிகரமான சிந்தனைகளை முன்வைப்பவர்களும் தமிழ் சமூகத்தால் பிறழ்வானவர்களாகவோ அல்லது துரோகிகளாகவோதான் பார்க்கப்படுவார்கள்.
இங்கு தமிழ்மொழி மீதான உணர்ச்சிமிக்க பாசமழையைப் பொழிந்து கொண்டு, தமிழினப் பெருமை பற்றி அடிக்கடி நீட்டி முழக்கிக்கொண்டு அவ்வப்போது தமிழ்த் தேசியம், தமிழர் தேசிய சுயநிhணய உரிமைக் கோஷங்கள் பற்றியும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் அத்துடன் தமிழ்ப் புலிப் பெருமையையும் இணைத்துக் கொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவித சிரமமுமில்லாமல் அரசியல் செய்யலாம் பதவிகளையும் சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம்
என்ற நிலைமை நிலவும் போது இங்கு பகுத்தறிவான விவாதங்களையும்,முற்போக்கான கலந்துரையாடல்களையும்,புரட்சிகரமான சிந்தனைகளின் கருத்துப்பகிர்வுகளையும் தமிழ் இனவிரோதமாவோ அல்லது தமிழ்த் தேசிய சமூக விரோதமாகவோ தமிழர்களிற் பெரும்பான்மையினர் பார்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இங்கு புலிகளால் தூக்கிவிடப்பட்ட தமிழினத் தலைப்பா அரசியல்வாதிகளும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொய்யான முகங்கள் கொண்ட வெள்ளை வேட்டி சமூகப் பிரமுகர்களும் இங்கு தமிழர்களைக் கவரும் இனவாத மாயவித்தைகளை நன்றாக கற்று வைத்திருக்கிறார்கள் - அவர்கள் தமது சொந்த இன மக்களின் நலன்கள் பற்றிய எந்தவித கூச்சநாச்சமுமின்றி தமது தமிழ் நாடக ஆடைகளைப் போர்த்திக் கொண்டு தாம் பழகி வைத்துள்ள தந்திர அஸ்த்திரங்களை அவ்வப்போது பிரயோகித்து தமக்குத் தேவையான சுகங்களை அள்ளிக் குவித்து தமது சுயநல மூட்டைகளை நிரப்பிக் கொள்வதில் மகாகெட்டிக்காரர்களாகவே உள்ளனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடந்து போன தேர்தல்களில் தங்;களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் தமக்கான அரசியற் தீர்வு தொடர்பாக என்ன செய்கிறார்கள் எப்படிச் செயற்படுகிறார்கள் என்பது பற்றி தமிழ் மக்களிற் பெரும்பான்மையினர் அறியாமையில் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அறிவதற்கான அக்கறையும் அவர்களிடத்திலில்லை என்பதே இங்கு யதார்த்தமாகும்.
பேச்சுவார்த்தை தொடர்பாக எந்தவொரு நம்பிக்கையும் ததேகூவின் தீவிர ஆதரவாளர்களிடம் கூட தொடக்கத்தில் இருந்தே காணப்படவில்லை என்பதுதான் இங்கு கவனத்துக்குரியதொன்றாகும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ததேகூவின் வேட்பாளர்களாக நின்று தோற்றுப் போனவர்களிடமும் அதே நிலைதான் காணப்படுகிறது. அவர்கள் சிலரிடம், ஐயா! உங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் அரசியற் தீர்வு காணவென சுற்றிச் சுற்றிச் சந்தித்து பேசி வருகிறார்களே!அந்தப் பேச்சுக்களில் என்ன நடக்கின்றன!என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன! முன்னேற்றங்கள் எந்தளவு தூரம் உள்ளது! எனக் கேட்டால், அவர்களோ வாயைப் பிதுக்கியபடி “அவர்கள் எங்களுக்கு எதுவும் சொல்வதில்லை, எங்களிடம் எதுவும் கேட்பதுமில்லை, அதனால் எங்களுக்கு எதுவும் தெரியாது”என்று தமது தலைவர்கள் பற்றிய விரக்தியையே வெளிப்படுத்துகிறார்கள்.தமிழர்களுக்கு ஜனநாயகம் கேட்பவர்கள் தங்கள் கட்சியின் சக தலைவர்களுடன் கூட ஜனநாயக பூர்வமாக நடந்து கொள்வதில்லை என்பதையே இந்த நிலைமை புலப்படுத்துகிறது.
தொடரும்.