Sunday, July 17, 2011

அரசாங்கம்-த.தே.கூ.பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா??????முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!:


பகுதி 4


மக்களுக்கும் தெரியாமல், தமது ஆதரவாளர்களுக்கும் புரிய வைக்காமல் ஏன்! தமது கட்சிகளின் சக தலைவர்களுடன் கூட கலந்துரையாடாமல் அப்படி என்னதான் பேசுகிறார்களோ என்று புரிய முடியாமல் இருக்கிறது! இதைப்பார்த்து நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள் பாடியது போல “என்னமோ நடக்குது மர்மமா இருக்குது, ஒண்ணுமே புரியலை உலகத்திலே” என்றுதான் பாடத் தோன்றுகிறது.இப்படி திகில் நிறைந்த மர்மங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த அவர்கள் ததேகூக்காரர்களுக்கு அரசியற் தீர்வு தொடர்பாக அப்படி என்னதான் அறுதியான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அரசுடன் இவர்கள் பேச்சுவார்ததை என்ற பெயரில் சுற்றிச் சுற்றி சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.



அப்படிப் பார்த்தால் இவர்களுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக்களின் மீது திட்டவட்டமான நம்பிக்கைகள் அல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அடிக்கடி வெளியிடும் அறிக்கைகளும் மேடைப் பேச்சுகளும் அரசாங்கத்துடன் இவர்கள் நடத்தும் சந்திப்புகள் மீது எந்தவொரு நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதாகக் காட்டவில்லையே! நம்பிக்கை ஏதும் ஏற்படுவதற்கான வாய்ப்பேதும் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கவுமில்லையே!


மாறாக நம்பிக்கையீனத்தையும் பேச்சுவார்த்தை மீதான விரக்தியையும் அரசாங்கத்தின் மீதான தமது ஆத்திரங்களையும் தானே வெளியிடுகிறார்கள்.பேச்சுவார்த்தை தொடர்பாக ததேகூக்காரர்கள் கடைப்பிடிக்கும் ரகசியமும் அதேவேளை அவர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக கொண்டிருக்கும் நம்பிக்கையீனங்களும் அவர்களின் அரசியல் நடத்தைகளில் ஒன்றுக்கொன்று முரணான குணாம்சங்களையே காட்டுகின்றன.


மக்களுக்கு ஒரு கதையை விட்டுக் கொண்டு திரைமறைவில் அரசுடன் தங்கள் சுயநலன் சார்ந்த நாடகங்களில் ஈடுபடுகின்றார்களா என்ற சந்தேகங்களையே ததேகூக்காரர்கள் தமது பேச்சுக்களாலும் நடத்தைகளாலும் வலுப்படுத்துகிறார்கள்.


சந்திக்கும் சுற்றுக்களில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக இருபகுதியினரும் ரகசியத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென அரசாங்கம் இவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் கூட அதனை இவர்கள் ஏன் “கட்டளை…. மகாராஜாவே” என பவித்திரமான ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


சொல்லுறவன் சொன்னால் அதைக் கேட்கிறவனுக்கு மதி எங்கே போய்விட்டது என எமது ஊர்களில் பெரியவர்கள் மிகச் சாதாரணமாகவே ஒரு பொன்மொழி சொல்வதை இந்த ததேகூக்காரர்களும் அறிந்திருப்பார்கள்தானே!


இவர்கள் சொல்வது போல மஹிந்த அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு நியாயமான நீதியான அரசியற் தீர்வைத் தருமென்றோ – ஏற்றுக் கொள்ளுமென்றோ நம்பமுடியாது என்பதுதான் இவர்களின் உறுதியான அபிப்பிராயமாக இருந்தால் பின்னர் எதற்காக அப்படிப்பட்ட ஒரு பேச்சுவார்த்தை சந்திப்புகள் பற்றி ரகசியம் பேணப்பட வேண்டும்.


இந்தியா ஓர் அரசியற் தீர்வை இலங்கை மீது திணித்தது அதனாலேயே அது நிறைவேற முடியாமற் போனது என தமிழர்களும் சொல்லுகிறார்கள், சிங்களவர்களும் சொல்கிறார்கள்.


அப்படியானால் அதன் அர்த்தம் சிங்களவர்களும் ஏற்றுக் கொண்ட தமிழர்களும் அங்கீகரித்த ஓர் அரசியற் தீர்வுதானே இலங்கையில் நடைமுறைக்கு சாத்தியமாகும்.


அப்படியிருக்கையில் இருபகுதியினராலும் பேணப்பட்டு வரும் இந்த ரகசியமானது இவர்களால் முடிவாக எட்டப்படும் உடன்பாடுகளை சிங்கள மக்களாலும் தமிழ் மக்களாலும் ஏற்கப்படாத ஒரு நிலையை உருவாக்கும் திடீரென குகைக்குள் இருந்து வெளிப்படும் ஒரு அறியாப் பூதத்தைக் கண்டு மிரள்வது போல சந்தேகங்களையும் எதிர்ப்பையும் இரு சமூக மக்களும் காட்டுகின்ற ஒரு நிலையையே ஏற்படுத்தும்.


எந்தப் பகுதி மக்களும் ஒரு பொதுவான விடயத்தை ஏற்பதாக இருந்தால் அது மக்களுக்கு முதலிற் தெரியத்தானே வேண்டும். மக்கள் மத்தியில் அது பற்றிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் நடந்தால்தானே மக்களுக்கு அந்த விடயம் பற்றிய புரிதலும் தெளிவும் ஏற்படும். அதன் மூலம்தானே இருபகுதியினரும் நடத்தும் பேச்சுவார்த்தைகளால் அடையப்படும் ஓரு தீர்மானகரமான உடன்பாட்டை மக்கள் நடைமுறையில் அங்கீகரிப்பதுவும், ஆதரிப்பதுவும் சாத்தியமாகும்!


அதைவிடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இருபகுதியினரும் கடைப்பிடிக்கும் ரகசியங்கள் இரு இனங்களுக்கும் இடையிலான சமாதான உறவை விரும்பாத இரு இனங்களிலுமுள்ள தீவிரவாத சக்திகளுக்கே உதவுவதாக இருக்கும்.அதேவேளை இரு இனங்களிலுமுள்ள முற்போக்கு சக்திகள் நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி எந்தவகையிலும் நிதானமாக நிறைகுறைகளை அளந்து கூறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.


ஒரு ஜனநாயக பூர்வமான தீர்மானமானது பொதுமக்களின் ஆதரவைத் திரட்டியபடி நடைமுறையில் வெற்றிகரமாக அமைவதென்பது அது பற்றிய அரசியல் மற்றும் சட்ட அறிவார்ந்தோர்களுக்கிடையே நடைபெறும் திறந்த விவாதங்களினூடாகவும், சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களுக்கிடையே பரந்தரீதியில் நடைபெறும் கலந்துரையாடல்களினூடாகவும், பல்வேறு பட்ட சமூக சமயத் தலைவர்களிடையே நடைபெறும் ஆழமான கருத்துப்பகிர்வுகளாலுமே சாத்தியமாகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியமாகும்.


ஒரு தொழிற் சங்கத் தலைமைக்கும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெறும் ஒரு பேச்சுவார்த்தையின் போது அதனோடு தொடர்பு பட்டிருக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்கு மட்டுமல்லாது அந்தத் தொழில் நிறுவனத்தின் நலன்களும் கருத்திற் கொள்ளப்பட்டே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகினறன.


அந்தத் தொழிற் சங்கத் தலைமையின் மீது அதன் தொழிலாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் தமது தொழிற் சங்கத் தலைமை தமது நன்மைக்காக என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பவை பற்றி அந்தத் தொழிலாளர்கள் கொண்டிருக்கும் தெளிவான புரிந்துணர்வும் அந்தத் தொழிற் சங்கம் வெற்றிகரமாக அதனது பேச்சவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு துணையாக உள்ளன.


தொழிலாளர்களுக்கு அவ்வாறான தெளிவான புரிந்துணர்வை அந்தத் தொழிற் சங்கத் தலைவாகள் வெளிப்படையாக வழங்குவதனாலேயே அவ்வாறானதொரு புரிதலோடு தொழிலாளர்கள் தமது தலைவர்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.


தமது தலைவர்களின் அழைப்புகளுக்கு கட்டுப்பட்டு அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு வலு வழங்கும் விதமாக தொழிலாளர்கள் தொழிற் பகிஷ்கரிப்புப் போராட்டங்களில் அணி திரள்கிறார்கள், வாசல் மறியல் போராட்டங்களை நடத்துகிறார்கள், மற்றைய தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிற் சங்கங்களின் ஆதரவைத் திரட்டுகிறார்கள்.


இவ்வாறாக ஒரு தொழிலாளர் இயக்கமாக ஒரு தொழிற்சங்கம் செயற்படுகிற போதே அத்தொழிற் சங்கமானது தொழில் உரிமையாளர்களுடன் தான் நடத்தும் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமான முன்னேற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது.


ஒரு பேச்சுவார்த்தையின் வெற்றியானது இருதரப்பினரதும் நலன்கள் எங்கு உச்சமானதொரு சமநிலையைக் காணும் வகையில் இருபகுதியினரும் சமரசம் காண்பதிலேயே தங்கியிருக்கின்றது. ஒவ்வொரு பகுதியினரும் தாம்தாம் குறிக்கின்ற தத்தமது நலன்களினது உச்சநிலையை மற்றப்பகுதியினர் அங்கீகரித்தால் மட்டுமே சமாதானம் சாத்தியம் என விடாக்கண்டர்களாக நின்றால் ஒரு பேச்சுவார்த்தை சமாதானம் என்ற கட்டத்தை வெற்றிகரமாக அடையவே மாட்டாது. பிடிவாதமான அப்படியொரு நிலை மற்றவரைப் பணிய வைப்பதற்கான – மற்றவரைத் தோல்வியடைய வைப்பதற்கான யுத்தமாகவே இருக்கும்.


ஒரு பகுதியினர் தாங்கள் கொண்ட ‘கற்பனை’இலட்சிய நிலைப்பாடுகளிலிருந்து மற்றப் பகுதியினருடன் எந்தவித விட்டுக் கொடுப்போ சமரசமோ இன்றி யுத்தத்தின் மூலம் அந்த இலட்சியங்களை நிஜமாக்க முனைவது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை அடைவதற்கான முயற்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாகும்.


வன்முறை யுத்தமொன்றின் மூலமான வெற்றியை பிரதானமாக நம்பியிருக்கிற போது கடைப்பிடிக்கிற பேச்சுவார்த்தை தந்திரமானது அந்த வன்முறை யுத்த மூல உபாயத்தின் ஒரு பகுதியான தந்திரமே ஆகும்.


ஆனால், பேச்சுவார்த்தை மூலமே ஒரு நியாயமான – நீதியான – நிலவும் சூழ்நிலைகளின் மத்தியில் ஒரு சமாதான உடன்பாட்டை நடைமுறையில் அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்குமாயின் அதன் அணுகுமுறையினுடைய அடிப்படையே வேறுபட்டதொரு விடயமாகும்.


வன்முறையற்ற அரசியல் முறை மூலமான முயற்சிகளால் எதுவும் சாத்தியமாகவில்லை, வன்முறை மூலமான அரசியலிலும் நாம் தோற்றுப் போய்விட்டோம். எனவே இப்போது இராஜ தந்திர முறை மூலம் நாம் எமது இலட்சியங்களை வென்றெடுக்க உள்ளோம்” என ததேகூவின் பிரதான தலைவரான மதிப்பிற்குரிய சேனாதிராஜா அவர்கள் சூளுரைப்பது அதனைப் பார்க்கின்ற – கேட்கின்ற பெரும்பான்மையான தமிழர்களைப் கவரும் வகையாகவே உள்ளது.


இங்குள்ள விடயம் என்னவெனறால், இந்த ராஜ தந்திரம் மூலம் எந்த நாடும் நேரடியாகத் தலையிட்டு எங்கள் விடயங்களைப் பற்றி அவர்களே பேசி எமக்கு விருப்பமானவற்றை எடுத்துத் தரப் போவதில்லை.எந்த ராஜதந்திரத்தைப் பாவித்தாலும் தமிழர்களின் தலைவர்கள் தமிழர்களுக்கான அரசியற் தீர்வை சிங்களத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை மூலம்தான் அடைய வேண்டும்.பேச்சுவார்த்தை என்று வந்து விட்டாலே இருபகுதியினருக்கிடையேயும் விட்டுக் கொடுப்புகள், சமரசங்கள், புரிந்துணர்வுகள் என்பன கட்டாயமானவைகளாகும். ஏனைய நாடுகளின் அழுத்தத்ன் கட்டாயம் காரணமாக இலங்கை அரசு தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டால்,அது இந்த நாட்டில் நிரந்தமான சமாதானத்தையோ அல்லது இனங்களுக்கிடையே இணக்கமானதொரு வாழ்வையோ ஏற்படுத்தாது என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இன்றுள்ள யுதார்த்தம் என்னவெனில், எந்தவொரு பிரதானமான உலக நாடும் இலங்கை அரசு எப்படிப்பட்ட ஒரு தீர்;வை முன்வைக்க வேண்டும் என்றுசொல்லப் போவதில்லை.இலங்கையில் இனப்பிரச்சினை அரசியல்ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பல நாடுகள் அக்கறையாக உள்ளன என்பது உண்மையே.ஆனால், எந்தநாடும் அந்தத் தீர்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருத்து வெளியிடப் போவதுமில்லை – அவ்வாறு இலங்கை அரசை வலியுறுத்தப்போவதுமில்லை.1984ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரை இந்தியா முயற்சித்து இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டில் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவை ஏற்கப் பண்ணியது போல இன்னொரு முறை நடக்கப் போவதில்லை. அந்தச் சந்தர்ப்பத்தை தமிழர்கள் இழந்து விட்டார்கள்.


1995ம் ஆண்டு அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் தானாகவே முன்வந்து இலங்கையில் ஒற்றையாட்சி முறையை நீக்கி பாரிய அளவில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் வகையாக ஓர் அரசியற் தீர்வை முன்வைத்து நடைமுறைப்படுத்த முயன்றார்.ஆனால் தமிழர்களைக் கற்பனை உலகத்தில் வைத்திருந்தவர்கள் அந்த சந்தர்ப்பத்தையும் தமிழர்கள் இழக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமை மீண்டும் வருமா என்று ஏங்குவதைத் தவிர வேறு வாய்ப்பான நிலைமை இன்று இல்லை என்பதை அறிவுடைய தமிழர்கள் அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.


2002ம் ஆண்டு உலகின் பிரதானமான நாடுகள் எல்லாம் ஒன்று திரண்டு இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறை அளவுக்கு ஒரு மாநில சுயாட்சி முறையொன்றை தமிழர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் அந்த நாடுகள் முயற்சித்தன.அந்த முயற்சிகளுக்கு அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் ஒப்புக் கொள்ளும் நிலையை உலக நாடுகள் ஏற்படுத்தின.ஆனால் புலிகளோ தமது தமிழீழத்தை நோக்கி ஏறுவதற்கான படிக்கட்டாக அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதாக நினைத்து உலக நாடுகளைத் தவறாகப் புரிந்து கொண்டதால் தமிழர்கள் அந்த சந்தர்ப்பத்தையும் இழக்கும் நிலையே ஏற்பட்டது. .


அதேவாறாக, மீண்டும் ஒரு தடவை உலகின் பிரதான நாடுகள் ஒன்று திரண்டு தமிழர்களுக்காக செயற்படும் – அல்லது செயற்பட வேண்டும் என நினைப்பது வெறும் கற்பனையேஅப்படி ஒரு நிலையை தாங்கள் ஏற்படுத்த உள்ளதாக யாரும் மக்களுக்குக் கூறினால் அது வெறும் ஏமாற்று வார்த்தைகளே.அப்படி ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட்டே ஆக வேண்டும் என யாரும் நம்பிக் காத்திருந்தால் அவர்கள் உலக அரசியல் உறவுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும்.


ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாகவோ அல்லது சனல் 4 வெளியிட்டுள்ள யுத்தத்தின் கடைசிநேரப் படுகொலைகளின் தொலைக்காட்சி காரணமாகவோ அல்லது இந்தியா மறைமுகமாக கொடுக்கும் அழுத்தம் காரணமாகவோ இன்றைய காலச் சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஓர் அரசியற் தீர்வு தொடர்பாக ததேகூக்காரர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்வந்துள்ளதை எப்படி சாதகமாக ஆக்கிக் கொள்வது என்பதே இங்கு பிரதானமான ஒன்றாகும்.


1985ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் அரசியற் பிரதிநிதிகள் பூட்டான் தலைநகரான திம்புவில் இந்தியாவின் வலியுறுத்தல் மற்றும் ஏற்பாட்டின் அடிப்படையில் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்குப் போன போது அந்தப் பேச்சுவார்த்தையினூடாக எதனையும் உருப்படியாக அடைய வேண்டும் என்ற எண்ணம் தமிழர் பிரதிநிதிகளுக்கு இருக்கவில்லை.மாறாக, இந்தியா வலியுறுத்துகிறது என்பதற்காகவும், அத்துடன் பேச்சுவார்த்தை என்ற தளத்துக்குப் போய் அதில் வைத்து இலங்கை அரசை அம்பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடனுமே தமிழர் பிரதிநிதிகள் அன்று திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.


புலிகள் 1986ம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்;த்தனாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறிக் கொண்டு இந்திய அரவணைப்புடன் பெங்களுருக்குப் போனமையானது புலிகள் தங்களுக்கே தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவ அங்கீகாரத்தை இந்தியா அளித்திருக்கின்றது என்பதை தமிழர்களுக்குக் காட்டுவதற்காகவே.


புலிகள் 1989ம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை மூலமான ஓர் அரசியற் தீர்வுக்கு தயாரெனக் கூறிக் கொண்டு பிரேமதாசா அவர்கள் கூட்டிய பேச்சுவார்த்தை அரங்கில் பங்குபற்றியமையானது இந்தியாவை தமிழர்களின் போராட்டத்திலிருந்து கழட்டிவிடுகின்ற தமது நோக்கத்தைச் சாதிப்பதற்காகவேயொழிய வேறொன்றுமல்ல.


1994ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது தமது யுத்தத்துக்கான தயாரிப்புக்களை மீள அமைத்துக் கொள்வதற்கான ஒரு கால இடைவெளியை எடுத்துக் கொள்வதற்காகவே.


2002ம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பாங்கொக் தொடக்கம் ஜெனீவா வரை பேச்சுவார்த்தை என்ற சுற்றுலாக்களில் புலிகள் ஈடுபட்டமையானது ஒரு அரசியற் தீர்வை பேச்சுவார்த்தை மூலம் அடைந்து விட வேண்டும் என்பதற்காகவல்ல. மாறாக, அப்போது அமெரிக்காவினால் சர்வதேசரீதியாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பின் தாக்கத்தில் இருந்து புலிகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், அத்துடன் தமது தமிழீழத்துக்கான யுத்தத்துக்கு வேண்டிய உலக அரவணைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துக்காகவுமே.


மேலே விபரிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களிலெல்லாம் பேச்சுவார்த்தை என்பது அரசியற் தீர்வுக்கான ஒரு முயற்சியாகவோ – மனமார்ந்த ஈடுபாடாகவோ இருக்கவில்லை. அனால் தமிழர்களின் இன்றைய நிலைமையைப் பொறுத்த வரையில், அரசுடனான பேச்சுவார்த்தை மூலம் ஓரளவு நியாயமான அத்துடன் நடைமுறையில் சட்டரீதியான குழப்பங்களோ அல்லது மத்திய ஆட்சியின் தடைகளோ இன்றி காரிய ஆற்றலுடன் செயற்படக் கூடிய ஒரு மாகாண ஆடசியை நிலைநாட்டுவதை இங்கு நோக்கமாகக் கொண்டே பேச்சவார்த்தையில் ஈடுபாடு காட்ட வேண்டும்..


ததேகூவினர் தாம் கூறி வரும் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தேசிய சுயநிர்ணய உரிமை என 1985ல் பூட்டான் தலைநகரான திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் திட்டவட்டமாக பகிரங்கமாக ஏற்கும் வரை உண்மையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற தீவிர நிலைப்பாட்டுடன்தான் இன்னமும் ததேகூகாரர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்களா?அதுவரை மாகாண ஆட்சி அமைப்புக்கு ஒரு நியாயமான -அவசியமான அதிகாரப் பகிர்வைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்ற நிலைப்பாட்டில் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்களா?


அல்லது இந்தியாவின் அழுத்தம் காரணமாக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள புலி ஆதரவுப் பிரமுகர்களின் ஆதரவை இழந்து விடக் கூடாது என்பதற்காக இந்த சுற்றுச்சந்திப்புகளில் ஈடுபட்டாலும் முடிந்தளவு அதிகாரப் பகிர்வை மாகாணங்களுக்குப் பெற வேண்டும் என்பதில் அக்கறையற்று இருக்கிறார்களா?


அரசாங்கம் தமிழர்களுக்கு எப்போதும் எந்த அதிகாரத்தையும் தராது என்பதை தமிழர்களுக்கும் உலக சமுதாயத்துக்கும் நிரூபிப்பதற்காக மட்டுமே பேச்சுவார்த்தை என்ற இந்த சுற்றுச் சந்திப்புகளில் ததேகூ ஈடுபட்டு வருகின்றதா?ததேகூவினர் எதைச் சாதிப்பதற்காக, யாரைத் திருப்திப்படுத்துவதற்காக, யாருடைய நலன்களுக்காக இந்த பேச்சுவார்த்தைச் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பற்றி கண்டறிந்து தெளிவு பெறுவது இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அனைவரினதும் கடமையாகும்.